Monday, September 3, 2007

உன்னால் முடியும் தம்பி...

On 6/30/07, Siva Sankar wrote:

> இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
> என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில்,
> ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல்
> வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை,
> அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால்
> எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக

> 1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு.
> மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த
> என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று
> சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான்
> வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு
> வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு
> அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு
> வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.

> 2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11
> மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு
> அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக
> என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன்
> மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான்
> போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை,
> 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(

> 3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95
> வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு
> வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என்
> அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து
> வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின்
> மரணத்திற்கு செல்லமுடியவில்லை.

> 4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும்
> செல்லமுடியவில்லை

> 5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த
> மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம்
> செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே
> போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )

> 6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, (
> இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )

> 7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான்,
> சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த
> சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம்
> பேச்சுவார்த்தை இல்லை :(( )

> 8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர்
> பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.

> 9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.

> 10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி
> செய்யமுடியாத சூழல்....:(

> 11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த
> காதல்.....
> 12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால்,
> இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம்
> முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு
> குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள்
> வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி
> வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன்
> குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என்
> வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).

> ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....

> தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக
> ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து
> பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா?
> நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த
> வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன
> லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும்
> நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால்
> மகிழ்வேன்....:((

> சிவா...செங்கம்.....

> --
> M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
> web: http://biosankar.4t.com
> blog for tamil articles: http://srishiv.blogspot.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



இந்த இழைக்கு, ரிஷியின் பதில்....

அன்புள்ள சிவ சங்கர்,

உங்கள் மடல் படித்தேன்.

அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக
எதுவும் அடி வாங்கவில்லை என்று.

ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா
என்ன...?

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை
ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது
அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.

உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும்
ஒரு சாதாரண நிகழ்வே...

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில்
அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே
இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில்
அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான
ஒன்றா...?

ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின்
அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம்
உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம்.
இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு
செய்வோம் அப்பொழுது.

துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.

நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது
நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.

எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப்
பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Continously Move towards your goal with detached attachment like a wheel.

எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை
என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த
நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம்.
அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.

இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர்
எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப்
பார்க்கலாம்.

உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த
அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

*மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:*

ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...?
எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு
கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச்
செய்கின்றான்.

மாறாக *மிஸ்டர் வொய்:*,

ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?

தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.

சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.

சூழல் மாறுகின்றது.

காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில்
காப்பாற்றப்படுகின்றார்.

அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.

மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது...
செயல் செயல்....

ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில்
அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.

சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.

அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.

நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன்
பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை
எனப் புலம்புவது எப்படி நியாயம்...?

இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம்
இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....

அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு
ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற
முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம்
உயரும்.

இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால்
புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள்
அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.

நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம்
என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...

மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற
எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த
என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்...
அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி
வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...

வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம்
முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற
தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.

நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள்
அவ்வளவே...

என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள்
இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும்
சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை
அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம்
பயணத்தினைத் தொடர்வோம்...

Friday, July 20, 2007

ஆன்மாவும் உயிரும் ஒன்றா...?

On 7/20/07, Sankar Kumar wrote:

மேலே தொடரும் முன் ஒரு வேண்டுகோள்!

ஆன்மாவும், உயிரும் ஒன்றா?

வெவ்வேறு என நான் கருதுகிறேன்.

உங்கள் பதில் கண்டதும் என் கருத்தைச் சொல்கிறேன்.

>>>>>>>>> ரிஷியின் பதில்......



பொதுவாக ஆன்மீகத்தில் ஆன்மா என்பது வேறு; உயிர் என்பது வேறு என்கின்றோம்.

ஆன்மா என்பது முற்பிறவியைக் கொண்டது என்றும்
மரணத்திற்குப்பின்னால் இன்னொரு பிறவியும் எடுக்கும் வல்லமை கொண்டது என்றும்
ஆன்மா என்றும் அழிவில்லாதது என்றும் ஒரு கருத்தினை சொல்வார்கள்.

இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்தக் கருத்தினை நாம் ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் கூட ஆன்மா அழிவில்லாதது; ஆகவே ஏற்கெனவே இருந்த ஆன்மாதான் இப்பொழுது பிறவி எடுத்திருக்கின்றது என்று வருகின்றது.

ஆக மொத்த ஆன்மா என்பது ஒரு மாறிலி(Constant). அதுவே வெவ்வேறு மனிதனாய் பிறவி எடுத்திருக்கின்றது... அதாவது உதாரணமாக ஒரு 1000 ஆன்மாக்கள் முதலில் இருந்தது. அது இப்பொழுது பூமியில் ஒரு 1000 மனிதனாய் பிறந்திருக்கின்றது என்பது போலாகும்.

அப்படியெனில் 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஜனத்தொகையும் இன்று இருக்கும் ஜனத்தொகையும் கணக்கிட்டால் இந்த உண்மை புரியும்.
இன்று எத்தனை கோடி உலக ஜனத்தொகை. அப்படியெனில் 100 வருடங்களுக்கு முன்னால் அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தன...?

ஆன்மீகவாதிகளின் வாதத்திற்கேற்ப இப்படி வைத்துக்கொள்வோம்.

அவரவர்கள் செய்த பாவ புண்ணிய செயல்களுக்குட்பட்டு ஆன்மா வெவ்வேறு பிறவிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. உதாரணமாக போனபிறவியில் ஆடாக இருந்த ஆன்மா இப்பொழுது மனிதனாய் பிறந்துள்ளது என்ற ஒரு வாதத்தினை வைக்கலாம்.

அப்படி ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் கூட 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த மொத்த உயிரினத் தொகையும் (அமீபா, ப்ளாஸ்மோடியம் உட்பட) கணக்கிட்டாலும் கூட இன்று இருக்கும் உயிரினத்தொகையுடன் ஒப்பிடும்பொழுது அந்தக் கூற்றும் பொய்யாகின்றது.

சரி அறிவியிலின்படி பார்த்தாலும் கூட,

ஒவ்வொரு உயிரினத்தின் DNA/RNA Pattern வேறுபடுகின்றது. அதனால் ஒரு ஆடு மனிதனாய் பிறக்க வாய்ப்பில்லை. பிறர் பயமுறுத்துவதுபோல் மனிதன் கழுதையாகப் பிறக்க வாய்ப்பில்லை.

அட அவ்வளவு ஏன் இந்த முற்பிறவி, பிற்பிறவி, சொர்க்கம், நரகம் எல்லாம் ஒரே மாதிரியான கட்டுக் கதைகளே...!

உயிர் என்பது ஒரு Closed Circuit of Bio-Magnetism. இந்த Circuit Break ஆகும்பொழுது மனிதனின் உயிர் பிரிகின்றது என்கின்றோம்.

விபத்தினால் இறந்தவர்களுக்கு அந்த Circuit Break ஆனாலும் கூட அந்த Bio-Magnetism பிரபஞ்சத்தில் கலக்கமுடிவதில்லை.... அது கரையும்வரை அது விண்ணில் இருக்க வேண்டியுள்ளது... இதைத்தான் ஆவி என்கின்றோம்...

சரி அப்படியென்றால் பாவம் செய்பவனுக்கும் நல்லது செய்பவனுக்கும் ஒரே மாதிரிதானே இறைவன் நடத்துவான்...?

உண்மையில் நல்லது என்றும் அல்லது கெட்டது என்றும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. Heat ல் எப்படி 0 டிகிரி செல்சியஸ் என்பதுவும் ஒரு வெப்பமோ... 100 டிகிரி செல்சியஸ் என்பதுவும் வெப்பமோ... அது போல...

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான விளைவு உண்டு.

நீங்கள் ஒரு பூங்காவில் நடக்க்கின்றீர்கள். அப்பொழுது அங்கிருக்கும் ஒரு பூவைப் பறிக்க நினைக்கின்றீர்கள். இந்த எண்ணம் கூட வான் காந்தத்தில் ஒன்றும் உங்கள் கருமையத்தில் ஒன்றும் பதியப்படுகின்றன. அவை வலிமையானால் செயலுக்கு வந்து விளைவினை ஏற்படுத்தாமல் போகாது...

இப்படித்தான் ஒரு புலியின் எண்ணத்திற்கு மான் பலியாகின்றது. ஒரு கொலைகாரனின் எண்ணத்திற்கு எத்தனையோ நல்லவர்களும் பலியாகின்றனர். ஆனாலும் செயல் விளைவுத் தத்துவத்தில் அவனுக்குத் தக்க தருணத்தில் இயற்கை தண்டனை அளிக்கின்றது... தண்டனை என்பதைவிட எண்ணத்திற்கேற்ப ஒரு விளைவினை நிகழ்த்தி அதற்கு இன்னொரு விளைவினை நிகழ்த்துகின்றது. அது அவனுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் தண்டனை என்கின்றோம்...

சட்டத்தினை ஏமாற்றலாம். ஏன் நீதிபதியே கூட நீதியின்றி நடக்கலாம்...ஆனால் இயற்கையின் முன்னால் யாரும் தப்பிவிட முடியாது. எல்லாம் வான்காந்தத்தில் பதிவு ஏற்பட்டுவிடும்...

யோகாவும் தியானமும்....

On 7/20/07, ராஜா அண்ணாமலை wrote:
தியானம் என்பதற்க்கும் யோகம் என்பதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன?

>>>>> ரிஷியின் பதில்....

யோகம் என்பது இணைதல் என்ற பொருள் படும்.
யாரருடன் இணைவது...?
இறைவனுடன்.
உடல் மனம் அனைத்தையும் இறைவனுடன் இணைத்தலே யோகம்.

இறைவனை அடைய உடல் நலம் மன வளம் இரண்டும் தேவை.

உடல் நலத்திற்கு ஆசனங்களையும் மனவளத்திற்குத் தியானங்களையும் வகுத்தனர்.

தியானம் செய்வதால் மட்டுமே ஒருவன் இறைவனை அடையமுடியாது.

ஆராய்ச்சி செய்யவேண்டும்; அனைத்தையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்;எண்ணங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்; ஒவ்வொன்றும் எப்படி இறைநிலையிலிருந்து பிரிந்து வந்திருக்க முடியும் என்ற ஆராய்ச்சி; அனைத்திலும் இறைவனைக் காணும் ஆராய்ச்சி... இந்தப் பரிபூர்ண நிலையே யோகம் எனப்படுவது.

சிலர் நினைப்பது போல் யோகா என்றால் உடலை வளைத்து செய்யும் ஆசனங்கள் அல்ல; அப்படிப் பார்த்தால் காலையில் நம் வீட்டு டீவிப் பெட்டியில் யோகா கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் ஏன் இறைநிலையை உணரவில்லை...?

மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனம் கீழ்க்கண்ட அதிர்வெண்களில் இயங்குகின்றது

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

இந்த அதிர்வெண் இயக்கங்களை EEG(Electro Encephologram) மூலம் மிகவும் எளிதாக அறியலாம். மருத்துவர்களுக்குத் தெரியும்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கப்படுகின்றது. இரத்தக் கொதிப்பிற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு...

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. இது தியானம் செய்வதாலும் அல்லது எந்த ஒரு செயலையும் ரசித்து ருசித்துச் செய்வதாலும் மனம் இந்த நிலையை அடைகின்றது. இங்கே உடல்நலம் சரி செய்யப்படுகின்றன.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இங்கே நுண்ணியக்க(querrying) அதிர்வுகளாக உள்ளது. இது இறைநிலையுடன் தொடர்புகொள்ளத் தக்க வல்லமை கொண்டது...

இதுதான் இறுதியில் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தினைக் கீழ்க்கண்டவாறு கொள்ளலாம்:

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி

என எட்டு நிலைகளைக் கொண்டதே யோகம் என்பது. இதில் தியானம் என்பது ஒரு படி அவ்வளவே...